புதுச்சேரி, காரைக்காலில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விடப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை (நவம்பர் 4) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ‘தீபாவளிக்கு மறு நாளும் அரசு விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும், ஊருக்குச் சென்றுவர அது பயன்படும்’ என்று அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் (நவ.5) அரசு விடுமுறை அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு சார்பு செயலர் கிரண் வெளியிட்டுள்ள உத்தரவில், ''புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி வரும் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 13-ம் தேதி பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.