ஒரு நிமிட வாசிப்பு

திருச்சி காங்கிரஸ் முன்னாள் பெண் எம்எல்ஏ காலமானார்

ஜெ.ஞானசேகர்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் லால்குடி தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜெ.லோகாம்பாள் (68), நேற்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள குமுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ.லோகாம்பாள். இவர், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 1991-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், அப்போதைய திமுக வேட்பாளரும் தற்போதைய அமைச்சருமான கே.என்.நேருவை எதிர்த்து வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கே.என்.நேருவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லோகாம்பாள் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு லோகாம்பாள் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு, இன்று சொந்த ஊரான குமுளூரில் நடைபெற உள்ளது.

இவருக்கு காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டப் பொருளாளராக உள்ள ஜெ.இளையராஜன் என்ற மகன் மற்றும் மகள்கள் 2 பேர் உள்ளனர்.

SCROLL FOR NEXT