ஒரு நிமிட வாசிப்பு

கரடியிடமிருந்து எஜமானரைக் காப்பாற்றிய நாய்: கோத்தகிரியில் நெகிழ்ச்சி

ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரி அருகே எஜமானரைக் கடிக்க வந்த கரடியை, நாய் விரட்டிச் சென்று காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனையைச் சேர்ந்த விவசாயி ராமராஜன். இவர் அங்குள்ள மலைப் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தொடர் மழை காரணமாகப் பனிமூட்டம் ஏற்பட்டிருந்தது.

இதனால், அருகில் இருக்கும் பொருள்கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை. அப்போது குட்டியுடன் வந்த ஒரு கரடி, திடீரென்று ராமராஜனைத் தாக்கியது. இதனால், அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்தார். கரடி மீண்டும் அவரது கழுத்தைக் கவ்விப் பிடிக்க முயற்சி செய்தது. இதனால், ராமராஜன் உதவி கேட்டு கத்தினார். அப்போது சற்று தூரத்தில் இருந்த நாய், எஜமானரின் சத்தம் கேட்டு அங்கு வந்தது. பின்னர் நாய், கரடிக் குட்டியை விரட்டியது. மேலும், தாய்க் கரடியை நோக்கியும் குரைத்தது.

தனது குட்டியை நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் தாய்க் கரடி ராமராஜனை விட்டுவிட்டு, நாயைத் துரத்தியது. இதில், சுதாரித்துக்கொண்ட ராமராஜன் உடனடியாக எழுந்து, கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்துக் கரடியைத் தாக்கினார். இதனால், குட்டியுடன் தாய்க் கரடி அங்கிருந்து தப்பியது.

பின்னர் ராமராஜனும், நாயும் வீட்டுக்குத் திரும்பினர். பின்னர் அங்கிருந்து கரடி கடித்த காயத்துக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று ராமராஜன் சிகிச்சை பெற்றார்.

எஜமானரைக் கடிக்க வந்த கரடியை, நாய் விரட்டிச் சென்று காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT