காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா வழங்கினார்.
காரைக்கால் மாவட்ட வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம், விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் இன்று (அக்.27) நடைபெற்றது.
இதில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்திக்கான ஊக்கத்தொகையை, அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2020- 21ஆம் ஆண்டில் சம்பா நெல் சாகுபடி செய்த பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 8 ஆயிரத்து 762, அட்டவணை இனத்தவருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.48 லட்சத்து 31 ஆயிரத்து 340 ஊக்கத்தொகையாக மொத்தம் 4,448 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெ.செந்தில்குமார், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.