ஆயுத பூஜையையொட்டி கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் அருகே மைல் கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து, வாழையிலை போட்டு படையலிட்டு, நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் வழிபாடு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் வித்தியாசமாக கரூர் மாவட்டம் புலியூரில் இருந்து, திருச்சி மாவட்டம் வையம்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உப்பிடமங்கலம் அருகேயுள்ள கி.மீட்டர் (மைல்) கல்லுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அத்துடன் வாழையிலையில் படையல் வைத்து வழிபாடு செய்தனர்.
ஆயுத பூஜையையொட்டி மைல் கல்லுக்குப் புது வண்ணம் பூசி, வாழை மரக்கன்றுகள் கட்டி, சந்தனப்பொட்டு, திருநீர், குங்குமம் பூசி, மாலை அணிவித்து, பொரி கடலை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாழை இலையில் வைத்துப் படையலிட்டனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்து பூஜையில் பங்கேற்றவர்களுக்கு வழங்கினர்.
நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் கி.மீட்டர் கல்லுக்குப் பூஜை செய்தது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளதுடன், வரவேற்பையும் பெற்றுள்ளது.