அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, கோவையில் பாஜகவினர் தீச்சட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய விசேஷ நாட்களிலும் கோயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, கோவை அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் அருகில், 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று (அக். 07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், குளவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் திறக்க அனுமதி, பள்ளிகள் திறக்க அனுமதி, ஆனால், கோயில்களைத் திறக்க மட்டும் தடையா என்பன போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.