10 முதல் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 125 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்துத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மதுரை, வேலூர், பாளையங்கோட்டை உட்படப் பல்வேறு சிறைகளில் 125 கைதிகள் 10 முதல் 20 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். இவர்களைத் தமிழக அரசின் 2018-ம் ஆண்டின் அரசாணை அடிப்படையில் முன் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக சிறைத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் 12 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.