பரங்கிப்பேட்டை அருகே வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர் பாலகிருஷ்ணன் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் இன்று (அக். 05) காலை மீனவர்கள் பலர் வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த மழை, இன்று காலை வரை நீடித்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்த நிலையில், சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது. இதில், மீன்பிடி வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாலகிருஷ்ணன் (56) மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தார். மேலும், மின்னல் தாக்கியதில் ராமலிங்கம் என்பவருக்குக் காது கேட்காமல் போனது.
மேலும், 16 பேர் மின்னல் தாக்கிய சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற புதுச்சத்திரம் போலீஸார் மற்றும் ஊர் மக்கள் இவர்கள் அனைவரையும் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனையில் பாலகிருஷ்ணன் (56) உயிரிழந்தார். மற்ற 16 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.