சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் தமிழகம் திகழ்கிறது என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினம், உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27-ம் தேதி 1980-ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும், சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கனிமொழி இன்று (செப். 27) தன் ட்விட்டர் பக்கத்தில், "உலக நாடுகள் வியக்கும் வகையில், தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம், சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது. அந்த வகையில், உலக சுற்றுலா தினமான இன்று, நம் சுற்றுலாத் தலங்களைப் பாதுகாப்பாக வைப்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.