காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததால், மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கான தேவைக்கேற்ப அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 73.61 அடியாக இருந்தது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி வீதமும், மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 750 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வந்தது.
அணைக்கு நேற்று, வினாடிக்கு 12,112 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று, வினாடிக்கு 10,277 கன அடியாகக் குறைந்தது.
இதனிடையே டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கான நீர் தேவை குறைந்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக, இன்று காலை 11 மணிக்குக் குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 72.97 அடியாகக் குறைந்துள்ளது.