ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்று டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதலாவதாக உயர்கல்வி பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் இரட்டைமலை சீனிவாசன். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, காந்தியடிகளுக்கு தமிழில் கையெழுத்திட கற்றுத் தந்தவரான இவர், தமிழக சட்டப்பேரவையில் தீண்டாமை ஒழிப்புச் சட்ட மசோதாவை முன்மொழிந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி சென்னையில் 23.09.1893-ல் முதன்முதலாக மாபெரும் மாநாட்டை நடத்தினார்.
தலித் சமுதாய மக்கள் இன்று பெற்றிருக்கும் சமூக உரிமைகள், கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்காகப் போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ''ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவரும், அவர்களுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்தவருமான இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று. ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்' என்று தெரிவித்துள்ளார்.