நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய மிகப்பெரிய தொடர் போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தில், நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழியின் வீட்டில், அவரது படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், இன்று (செப்.16) மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது, ''நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் மரணம் குறித்து, பாஜகவினர் கொச்சைப்படுத்தி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்க மறுக்கும்பட்சத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தைப் போல் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக பெயரளவிற்கு, ஒப்புக்குத் தீர்மானம் நிறைவேற்றியது. அவர்கள் நினைத்திருந்தால், மத்திய அரசுடன் கூட்டணி இருந்த நிலையில் நீட்டுக்கு விலக்கு பெற்றிருக்கலாம். உள்ளாட்சித் தேர்தலை திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சந்திக்கும்'' என்று தெரிவித்தார்.