பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது . இதனால் பாலக்காடு மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள கரையோர கிராமங்களுக்குத் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாகப் பருவ மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சோலையாறு அணை 161.29 அடியை எட்டியுள்ளது. ஆழியாறு அணை 118.95 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில், 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,300 கன அடியாக உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் மூன்று மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், சுரங்கப் பாதை வழியாக விநாடிக்கு 1300 கன அடி தண்ணீர் தூணக்கடவு அணைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள கரையோர கிராமங்களுக்குத் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.