மத்திய அரசும், புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசும் மீனவர்களைப் பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆர்.கமலக்கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச்.பரூக் மரைக்காயர் 84-வது பிறந்த நாளையொட்டி, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (செப்.6) காரைக்காலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஆர்.கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மத்திய பாஜக அரசும், புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசும் மீனவர்களைப் பாதுகாக்கும் வகையிலும், இலங்கை மீனவர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டிக்கின்ற வகையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காரைக்கால் மாவட்டடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும்போது கடுமையாகத் தாக்கப்படுவதும், அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையும் நிலவுகிறது. மத்திய பாஜக அரசு காரைக்கால் மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு கமலக்கண்ணன் தெரிவித்தார்.