3 உலக சாதனைகளை நிகழ்த்தி, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அந்தில் இன்று தங்கம் வென்றார். மேலும் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து அவர் புதிய உலகச் சாதனை படைத்துள்ளார்.
F64 பிரிவில் களமிறங்கிய சுமித் அந்தில், தனக்கு மொத்தம் வழங்கப்பட்ட ஐந்து வாய்ப்புகளில், முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார். அவரே 5வது முயற்சியில் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து புதிய உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில் சுமித் அந்திலுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இன்று பொன்னான நாளாக அமைந்திருக்கிறது. ஈட்டி எறிதலில் ஒரே நிகழ்வில் மூன்று உலக சாதனை எறிதல்களுடன் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள சுமித் அந்திலுக்கு எனது பாராட்டுகள். அவரது சாதனை உண்மையிலேயே தனிச்சிறப்பானது'' என்று தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பதக்கப் பட்டியலில் 2 தங்கம், 1 வெண்கலம், 4 வெள்ளிப் பதக்கங்களுடன் இந்தியா 25வது இடத்தில் உள்ளது. பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் 2வது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது