இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதி தொடர்புகளை தலிபான் நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது.
இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத் தொடர்பை தலிபான்கள் துண்டித்துள்ளனர்.
இது குறித்து இந்திய ஏற்றுமதி கழக கூட்டமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அஜய் சஹாய் கூறுகையில், "பாகிஸ்தான் வர்த்தகப் பாதை வழியாக இந்தியாவுக்கு வரும் பொருட்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் நகர்வுகளை நாங்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
வர்த்தக ரீதியாக ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு நீண்ட கால தொடர்பு இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு ஆண்டுக்கு சராசரியாக 800 மில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதியும், 500 மில்லியன் டாலர் அளவில் இறக்குமதியும் நடைபெறுகிறது.
இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு சர்க்கரை, மருந்துப் பொருட்கள், ஆடைகள், தேயிலை, காபி, வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அங்கிருந்து இந்தியாவுக்கு பெரும்பாலும் உலர் கொட்டைகளே இறக்குமதி செய்யப்படுகின்றன. குறைந்த அளவில் வெங்காயமும், கோந்தும் இறக்குமதியாகிறது" என்றார்.