அசாம் மாநிலத்தில் 5 வயது சிறுமி ஒருவரை போதை ஆசாமி கடத்திச் செல்ல போலீஸார் துரிதமாக செயல்பட்டு சிறுமியைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தேமாஜி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி நேற்று மாலை 6 மணியளவில் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். சிறுமியின் பெற்றோர் உடனே போலீஸில் தகவல் கொடுத்தனர்.
குழந்தையின் பெற்றோர் இருவருமே அரசுப் பணியில் உள்ளனர். அவர்களின் முயற்சியால் போலீஸாருடன், காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும் குழந்தையைத் தேடும் பணியில் இணைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தையை அதே பகுதியில் வசிக்கும் அர்ஜூன் பேகு என்ற போதை ஆசாமி கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆகையால் போலீஸார் அர்ஜூனின் செல்ஃபோனை சோதனை செய்தனர்.
அப்போது அந்த நபர் பாசிகட் நோக்கிச் செல்வது ஜிபிஎஸ் மூலம் கண்டறியப்பட்டது. போலீஸார் அந்தப் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்களும் குழந்தையைத் தேடும் பணியில் இணைந்தனர். இன்று காலை 5 மணியளவில், கிழக்கு சியாங் பகுதியில் குற்றவாளி பயன்படுத்திய கார் கண்டுபிடிக்கப்பட்டது. ஆள் அரவமற்ற அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது, தனியாக இருந்த வீட்டில் குழந்தை அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையை போலீஸார் மீட்டனர். குழந்தை பத்திரமாக இருந்தது. மருத்துவப் பரிசோதனையிலும் குழந்தைக்கு உடல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்கப்படவில்லை என்பது உறுதியானது.
துரிதமாக செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றிய போலீஸாருக்குப் பாராட்டு குவிகிறது.
போதை ஆசாமி இன்னும் பிடிபடவில்லை.