யுபிஎஸ்சி தேர்வில், "மேற்குவங்க தேர்தல் கலவரம் குறித்து எழுதவும்?" என்று கேட்கப்பட்டிருந்த கேள்வியை சுட்டிக்காட்டி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார் மம்தா பானர்ஜி.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் மற்றும் காவலர்கள் தேர்வு நடத்துகிறது.
அண்மையில் இத்தேர்வாணையம், மத்திய ஆயுதக் காவலர் படைக்கான தேர்வை நடத்தியது. இதில், 200 கேள்விகள் கொண்ட கேள்வித் தாளில் மேற்குவங்க தேர்தல் கலவரம் குறித்து எழுதுக? என்றொரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "பாஜக யுபிஎஸ்சி போன்ற அமைப்புகளையும் சீர்குலைக்க ஆரம்பித்தவிட்டது. பாஜக ஆதரவுக் கேள்விகளை எல்லாம் யுபிஎஸ்சி கேட்கத் தொடங்கிவிட்டது. யுபிஎஸ்சி என்பது சுயாதீன அமைப்பு அல்லவா?
ஆனால், அந்த அமைப்பிலும் தலையிட்டு பாஜக சில கேள்விகளைக் கொடுத்து கேட்க வைக்கிறது.
சமீபத்தில், ஐஏஎஸ் தேர்விலும் விவசாயிகள் போராட்டம் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்டதா என்றொரு கேள்வி கேட்கப்பட்டது.
யுபிஎஸ்சி தேர்வு வாரியத்தில் பாஜகவின் கையாள் இருக்க வேண்டும். மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப் பின் வன்முறை நடந்ததாக பாஜக தான் கட்டுக்கதை கட்டிவருகிறது. தேர்தல் முடிவை எதிர்கொள்ள முடியாமல் இந்தக் கதை கூறப்படுகிறது" என்று சாடியுள்ளார்.