இந்தியாவிலேயே சுத்தமான நகராக அறியப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் தற்போது வாட்டர் பிளஸ் சிட்டி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்வச் சுர்வேசன் 2021 திட்டத்தின் கீழ் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இந்தூர் நகர மக்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவிலேயே வாட்டர் ப்ளஸ் சிட்டி என்ற அந்தஸ்தைப் பெற்று முதல் நகரமாக இந்தூர் நகரம் தேர்வாகியுள்ளது.
தூய்மையை நிலைநாட்டுவதில், ஒட்டுமொத்த தேசத்துக்கும் இந்தூர் முன்னோடியாக இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
வாட்டர் ப்ளஸ் சிட்டி என்றால் என்ன?
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, ஒரு நகரம் வாட்டர் ப்ளஸ் நகரமாக வேண்டும் என்றால், அங்குள்ள வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சுற்றுப்புற ஏரி, குளங்கள், கடலில் கலப்பதற்கு முன்னதாக முழுமையாக சுத்திகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
அத்தகைய நிலையை இந்தூர் நகரம் எட்டியுள்ளதால் அதற்கு வாட்டர் ப்ளஸ் சிட்டி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வச் சர்வேக்சான் திட்டம் மூலம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் சுகாதாரம், சுத்தம், தூய்மை ஆகியன சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றன.
நாட்டில் மிக தூய்மையான நகரங் கள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்தது. மிக அசுத்தமான நகரமாக உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகரம் உள்ளது தெரிய வந்துள்ளது.