திருச்சி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள் சிலவற்றை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லியம்பத்து, மருதாண்டகுறிச்சி, முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்குப் பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அந்தநல்லூர் ஒன்றியக் குழு சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலச் செயலாளர் ஏ.பழனிசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.லெனின், மாவட்டச் செயலாளர் என்.தங்கதுரை, மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் அரசின் சமூக நலத் திட்டங்கள், உழவர் பாதுகாப்புத் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இலவசத் தொகுப்பு வீடு வழங்கும் திட்டம் உட்பட அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பறிபோகும். வீட்டு வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, சொத்து வரி உள்ளிட்ட எல்லா வரி இனங்களும் பல மடங்கு உயரும்.
இதனால் கிராமப்புற ஏழை- எளிய மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை கேள்விக்குறி ஆகும். எனவே, கிராமப்புற ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.