ஒரு நிமிட வாசிப்பு

'சச்சின் சாரை சந்தித்தேன்; ஊக்கம் பெற்றேன்': வெள்ளி மங்கை மீராபாய் சானு

செய்திப்பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற வீராங்கனை மீராபாய் சானு, கிரிக்கெட் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை இன்று நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்துகளைப் பெற்றார்.

இந்த சந்திப்பு குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று காலையில் சச்சின் சாரை நான் சந்தித்தேன். ஊக்கமும், ஞானமும் நிறைந்த அவரின் வார்த்தைகள் என்றும் என்னுடன் நிறைந்திருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

வெள்ளி மங்கை மீராபாய்:

சாய்கோம் மீராபாய் சானு, மணிப்பூரில் இம்பால் நகருக்கு அருகில் உள்ள சிற்றூரில் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தார். 6 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் மீராபாய் கடைக்குட்டி ஆவார். மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான குஞ்சராணி தேவியால் ஈர்க்கப்பட்டு, இவ்விளையாட்டில் இணைந்தார் சாய்கோம் மீராபாய் சானு.

11 வயதிலேயே உள்ளூரில் நடந்த பளுதூக்கும் போட்டி ஒன்றில் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

2014-ம் ஆண்டில் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கினார் மீராபாய் சானு. மீரா பாய்க்கு பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆசிய பளுதூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார் மீராபாய் சானு.

தற்போது, டோக்கியோ ஒலிம்பிக் மகளிர்க்கான பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். மீராபாய் சானு காவல் கூடுதல் கண்காணிப்பாளராக (விளையாட்டு) நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT