கமல்: கோப்புப்படம் 
ஒரு நிமிட வாசிப்பு

வெள்ளை அறிக்கை; மஞ்சள் கடுதாசி என்று சொல்லலாம்: கமல் விமர்சனம்

செய்திப்பிரிவு

வெள்ளை அறிக்கையை மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மறுநாள் ஆக.14 அன்று வேளாண்மைத் துறைக்கென முதன்முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

முன்னதாக, தமிழக அரசின் நிதிநிலை குறித்து, நிதியமைச்சர் நேற்று (ஆக. 09) வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி எனவும், கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆகச் சரிந்துள்ளது எனவும், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜிஎஸ்டி வரி பாக்கி ரூ.20,033 கோடியை மத்திய அரசு தர வேண்டியுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர், கடந்த அதிமுக அரசின் தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய சரிவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், இத்தகைய பொருளாதார சூழ்நிலையில், திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், வெள்ளை அறிக்கை குறித்து, இன்று (ஆக. 10) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT