ஒரு நிமிட வாசிப்பு

தனியார் பங்களிப்புடன் ஏ.எப்.டி மில்லை இயக்கத் திட்டம்: புதுவை முதல்வர் ரங்கசாமி

செ. ஞானபிரகாஷ்

தனியார் பங்களிப்புடன் ஏ.எப்.டி மில்லை இயக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுவை முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி மில் வளாகத்துக்கு நேரில் சென்று இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசுத் துறைச் செயலாளர்கள் அருண், வல்லவன் ஆகியோர் உடன் வளாகத்தைச் சுற்றி பார்த்த அவர், பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“புதுச்சேரி ஏ.எப்.டி மில்லை மீண்டும் சீரமைத்து தனியார் பங்களிப்புடன் இயக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை பட்ஜெட்டுக்கான நிதி ஒப்புதல் இன்னும் வரவில்லை. அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் மற்றும் பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன். அப்போது ஏஎப்டி, நிதி உட்பட புதுவை மாநிலக் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்படும்.

புதுச்சேரியில் புதிய சிசிடிவி கேமரா கண்காணிப்பு திட்டம் வருகிறது. இதற்காக கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கு ஏ.எப்.டி இடத்தைப் பார்வையிட்டுள்ளோம்".

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

முதல்வர் ரங்கசாமியை ஏ.எப்.டி மில்லில் பணியாற்றிய ஊழியர்கள் சந்தித்து, பணிக்கொடை, நிலுவைச் சம்பளம், ஓய்வூதியம் வழங்க கோரிக்கை வைத்தனர். அப்போது ரங்கசாமி, அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி கோரிக்கைகள், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனக் கூறினார்.

SCROLL FOR NEXT