அரியலூர் மாவட்டத்தில் மருத்துவத் துறையின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளைப் பார்வையிட்ட மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை விரைந்து தொடங்க மருத்துவருக்கு உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டம், வாலாஜா நகரம் கிராமத்தில் ’மக்களைத் தேடி மருத்துவம்’ மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆகிய நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பங்கேற்று, பணிகள் மற்றும் முகாமைப் பார்வையிட்டார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டிகள், பார்வைக் குறைபாடு உள்ளோருக்குக் கண் கண்ணாடி ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் மற்றும் கரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக வளர்மதி (65) என்பவர் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், அறுவை சிகிச்சை செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து, ஆய்வுப் பணிக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், வளர்மதியின் மகள் சரிதா கோரிக்கை மனுவாக அளித்தார். தனது தாய் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும், உரிய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்கக் கூறினார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவரை அழைத்த மா.சுப்பிரமணியன், அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சிகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.