மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் திருவுருவச் சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (ஆக.06) ஈடுபட்டனர்.
போராட்டத்தில், கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் திருவுருவச் சிலை மற்றும் மணிமண்டபம் கட்டவேண்டும். ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்து முன்னணி திருச்சி கோட்டச் செயலாளர் குணா தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு செயலாளர் அய்யம்பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தா.பழூர் ஒன்றியத் தலைவர் விஜய், ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் மனோகர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் ஆனந்தன் ஆகியோர், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.