ஒரு நிமிட வாசிப்பு

தரையில் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்

அ.முன்னடியான்

தரையில் அமர்ந்து மக்களின் குறைகளைப் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கேட்டறிந்தார்.

புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மணவெளி சீனிவாசா அவென்யூ பகுதி மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான செல்வம் மக்களோடு தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, ‘‘சாலை, கழிவுநீர் வாய்க்கால் வசதி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் புதிய குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்’’ என அப்பகுதி மக்கள் சட்டப்பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பதில் கூறும்போது, ‘‘சீனிவாசா அவென்யூ பகுதியில் புதியதாக கழிவுநீர் வடிகால் வசதியுடன் கூடிய தார்ச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் சிஎஸ்ஆர் நிதி மூலம் விரைவில் தொடங்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும், அந்தப் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைப்பதற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் உடனடியாகப் பேசி குடிநீர் குழாய் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். கலங்கலாக வரும் குடிநீரை ஆய்வு செய்து உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அதையும் சரிசெய்தார்.

துரித நடவடிக்கை எடுத்த சட்டப்பேரவைத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT