தாய்ப்பால் வாரவிழா கொண்டாடும் இத்தருணத்தில் சிவகங்கை நகராட்சிப் பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆண்கள் ஓய்விடமாக மாறியுள்ளது.
உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் ஆண்டுதோறும் ஆக.1 முதல் ஆக.7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. கூட்டம் நிறைந்த பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பசியால் அழும் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு சிரமப்பட்டனர்.
இதையடுத்து தாய்மார்கள் சிரமமின்றி தனிமையில் பாலூட்டும் வகையில் 2015-ம் ஆண்டு மாநகராட்சி, நகராட்சிப் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 351 இடங்களில் அறைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சிவகங்கை நகராட்சி பேருந்துநிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆண்களின் ஓய்விடமாக மாறியுள்ளது. எப்போதும் இந்த அறையில் ஆண்களே ஓய்வெடுக்கின்றனர். மேலும் அறைக்கு கதவும் இல்லை.
இதனால் பாலூட்டும் தாய்மார்கள் இந்த அறையைப் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் பல இடங்களில் பாலூட்டும் அறைகள் பயன்படுத்த முடியாத நிலையிலேயே உள்ளன.
உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடித்து வரும் இத்தருணத்தில் பயன்பாடின்றி உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.