அரியலூர் அருகே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க கோரி, சிமென்ட் ஆலை முற்றுகை. 
ஒரு நிமிட வாசிப்பு

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்கக் கோரி அரியலூர் அருகே சிமென்ட் ஆலை முற்றுகை

பெ.பாரதி

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில், படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், ஆலையின் சமூக மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கீழப்பழுவூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களுக்கு செய்து தரவேண்டும் என, அப்பகுதி மக்கள் இன்று (ஆக. 02) ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இது தொடர்பாக, ஆலை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், மேலும், இரவு நேரங்களில் ஆலைகளிலிருந்து அதிகப்படியான நச்சுப்புகையை வெளியேற்றுவதாகவும், இதன் காரணமாக, மக்களுக்கு சரும நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார், மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆலையில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்ளே செல்ல முடியாமல், சுமார் 1 மணி நேரம் வெளியிலேயே காத்திருந்தனர். மக்கள் கலைந்து சென்ற பின்னரே ஊழியர்கள் பணிக்கு சென்றனர்.

SCROLL FOR NEXT