அரியலூர் அருகே பழுதடைந்த மின்மாற்றியைச் சீரமைக்க வலியுறுத்தி, துணைமின் நிலையத்தை விவசாயிகள் இன்று (ஜூலை 30) முற்றுகையிட்டனர்.
அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் பகுதியில் உள்ள விவசாய மின் மோட்டார்களுக்குத் தேளூர் துணைமின் நிலையத்தில் இருத்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால், மின்சாரம் தடைப்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்காததால், பயிர்கள் கருகி வருவதாகக் கூறி தேளூரில் உள்ள துணைமின் நிலையத்தைக் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மின்துறை அதிகாரிகள், பழுதான மின்மாற்றி சீரமைக்கப்பட்டு விரைவில் மின் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.