ஒரு நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில் படிப்படியாக உயரும் கரோனா தொற்று 

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸார் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

கரோனா தொற்றின் 2-வது அலையின் காரணமாக கடந்த மே மாதம் 9-ம் தேதி முதல் ஊரடங்கு மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் தடுப்பூசி போடுவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள், தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும் கிராமப்புறங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதிகம் உள்ளதால் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்ற வருகிறவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் காட்டினால்தான் வேலை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறையினர் செயல்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தில் 1808 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 23,364 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் 41 பேருக்குத் தொற்று ஏற்பட்டு, 42 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதாகவும், இதுவரை 340 பேர் உயிரிழந்தாகவும் சுகாதாரத்துறை அறிவித்தது.

ஜூலை 20-ம் தேதி 24 பேருக்கும், 21-ம் தேதி 34 பேருக்கும், 22-ம் தேதி 38 பேருக்கும், 23-ம் தேதி 37 பேருக்கும், 24-ம் தேதி 39 பேருக்கும், நேற்று (25-ம் தேதி) 41 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் படிப்படியாக மீண்டும் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT