பெண் காவலர்களின் நலன் கருதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை திண்டுக்கல் எஸ்.பி.ரவளிபிரியா இன்று தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஏ.டி.எஸ்.பி. லாவண்யா முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தைத் தொடங்கி வைத்தார். பெண் காவலர்களின் நலன் கருதியும், பணியின்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் 41 காவல் நிலையங்களை உள்ளடக்கிய 27 இடங்களில் தானியங்கி சானிட்டரி நாப்கின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து திண்டுக்கல் ஆயுதப் படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், கணவன், மனைவி இருவரும் பணியில் இருப்பதால் அவர்கள் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு குழந்தைகள் காப்பகத்தைத் திண்டுக்கல் எஸ்.பி. ரவளிபிரியா திறந்து வைத்தார்.
காப்பகத்தில் உள்ள தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையில், ஐந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அலைபேசி மூலம் காணும் வகையில் பெற்றோர்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.