மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆய்வு செய்தார். அப்போது, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டத்தூர் கிராமத்தில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களிடம் பணி குறித்தும், ஊதியம் குறித்தும் விசாரித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுக்கான ஊதியத்தை தற்போது ரூ.273 ஆக உயர்த்தியுள்ளார். அது உங்களுக்குத் தெரியுமா எனவும், இந்தத் தொகையை விரைவில் ரூ.300 ஆக உயர்த்தப் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.