திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட விவசாயிகள் 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.
"காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு கைவிட வேண்டும். அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. விவசாய விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்த தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, டெல்லிக்கு ரயில் ஏறுவதற்காக, திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு வீட்டிலிருந்து விவசாயிகள் 100-க்கும் அதிகமானோர் இன்று (ஜூலை 20) ஊர்வலமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது, விவசாயிகள் பலர் சட்டை அணியாமலும், சிலர் கோவணத்துடனும், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கையில் வைத்திருந்தனர்.
வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் புறவழிச் சாலையை அடைந்த விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், விவசாயிகள் அந்தச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக, சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, வாகன ஓட்டிகள் சிலர், அய்யாக்கண்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அய்யாக்கண்ணுவும் வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டுக் கொண்டிருந்தபோது, விவசாயி ஒருவர் திடீரென தனது ஆடையை முழுமையாக கலைந்து விட்டார். போலீஸாரின் எச்சரிக்கையை அடுத்து உடனடியாக அவர் ஆடையை உடுத்திக் கொண்டார். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 5 பேர் உட்பட 115 பேரை போலீஸார் கைது செய்தனர்.