பிரதிநிதித்துவப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

கிருமிநாசினிக்கு பதிலாகத் தண்ணீர்: ஜவுளிக் கடையைப் பூட்டிச்சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கிருமிநாசினிக்கு பதிலாகத் தண்ணீரை வைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றிய ஜவுளிக்கடையை வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டிச் சென்றனர்.

தமிழ்நாட்டில் ஆடித் தள்ளுபடியால் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள ஜவுளிக் கடைகளில் கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள் கரோனா தடுப்பு குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தனர். அப்போது முகக்கவசம் இல்லாமல் பைக்கில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பெரியகடை வீதியில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர்.

அப்போது ஒரு ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் கைகளைக் கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினியை ஆய்வு செய்தனர். சோதனையில் அது சாதாரண தண்ணீர் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், வாடிக்கையாளர்களை ஏமாற்றிய ஜவுளிக்கடை உரிமையாளரை எச்சரித்ததோடு, கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT