புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இதில் நான்கு குழந்தைகள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''புதுவை மாநிலத்தில் 5 ஆயிரத்து 243 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுவையில் 36 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 2, மாஹேவில் ஒருவர் என மொத்தம் 42 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 57 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 44 பேர் கதிர்காமம் கரோனா மருத்துவமனையிலும், 35 பேர் கோவிட் கேர் சென்டர்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மருத்துவமனைகளில் 183 பேர், வீட்டுத் தனிமையில் 858 பேர் என மொத்தமாக 1,041 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 125 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று புதுவை மாநிலத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
புதுவையில் 7 குழந்தைகள் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 குழந்தைகளுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 4 குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள். 2 குழந்தைகள் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள். பச்சிளம் குழந்தையின் தாய் ஒருவர், தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்''.
இவ்வாறு புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.