சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆழ்துளை கிணற்றில் ஆழத்தை காணாததால், அதை சீரமைக்க முடியாமல் ஊரக வளர்ச்சித் துறையினர் அப்படியே விட்டுச்சென்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 779 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2,452 குடியிருப்புகளுக்கு உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காரைக்குடி அருகே பெரியகோட்டை கிராமத்தில் வடக்குவளவு, கோனார்குடியிருப்பு பகுதிகளில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு, 350 அடியில் ஆழ்த்துளை கிணறு அமைக்கப்பட்டது.
ஆனால் சில மாதங்கள் மட்டுமே குடிநீர் வந்தநிலையில், ஆழ்த்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனது. மேலும் மோட்டாரும் பழுதடைந்தது.
இந்நிலையில் ஆழ்த்துளை கிணற்றில் குழாய்களை அடிமட்ட ஆழம் வரை பொருத்தி தண்ணீர் எடுக்க ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் ஆவணத்தில் உள்ளபடி 350 அடி ஆழத்திற்கு பதிலாக வெறும் 200 அடிக்கும் குறைவான ஆழமே இருந்தது. மேலும் குழாயும் சொன்ன அளவிற்கு பொருத்தவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊரகவளர்ச்சித்துறையினர் அப்படியே ஆழ்த்துளை கிணற்றை விட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அரை கி.மீ., நடந்து சென்று எடுத்து வரும்நிலை உள்ளது.
இதுகுறித்து பெரியகோட்டை முருகேசன் கூறுகையில், ‘ குறிப்பிட்ட ஆழத்தை விட, குறைவான ஆழமே தோண்டியதால் தண்ணீர் வராமல் போய்விட்டது. ஆழ்த்துளை கிணறு அமைக்கும்போதே அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
மேலும் அந்த ஆழ்த்துளை கிணற்றை பயன்படுத்த முடியாததால், நிதி வந்ததும் வேறு இடத்தில் ஆழ்த்துளை கிணறு அமைப்பதாக கூறுகின்றனர்,’ என்றார்.
இதேபோல் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் ஆவணத்தில் உள்ள ஆழத்தை விட குறைவான ஆழமே தோண்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தள்ளது.