கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வனத்துறை கேமராவில் பதிவான கழுதைப் புலி. 
ஒரு நிமிட வாசிப்பு

கோவையில் வனத்துறை கேமராவில் பதிவான புலி, கழுதைப்புலி

க.சக்திவேல்

கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்களை உள்ளடக்கிய கோவை வனக் கோட்டத்தில் புலி, கழுதைப் புலி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் வனத்துறையின் தானியங்கி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாகக் கோவை மண்டலக் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் கூறியதாவது:

''கோவை வனப்பகுதி பல்வேறு வன உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. பொதுவாக யானைகளைப் பற்றித்தான் வெளியில் பொதுமக்களுக்குத் தெரியவருகிறது.

கோவை வனக்கோட்டத்தில் புலிகள் நடமாட்டம் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மான், காட்டுமாடு போன்ற தாவர உண்ணிகள் நல்ல எண்ணிக்கையில் இருப்பதால்தான் புலி இருக்கிறது. இது வனத்தின் ஆரோக்கியச் சூழலையும், பாதுகாப்பையும் குறிக்கிறது. சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்கம் செய்த புலிகள், புதிதாக இருப்பிடம் தேடி இடம்பெயர்ந்து கோவை வனக்கோட்டத்தில் தங்கள் எல்லையை வரையறுத்து வாழ்ந்து வருகின்றன.

இதுதவிர, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, யானைகள், முள்ளம்பன்றி, கழுதைப் புலி உள்ளிட்டவையும் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வனவிலங்குகள் வாழ்விடத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உறுதுணையாக கோவை வனக்கோட்டம் இருப்பதால் கழுதைப் புலிகளின் நடமாட்டமும் இங்கு உள்ளது. இதேபோல, கோவை வனக்கோட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு விதமான பறவைகள், பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன''.

இவ்வாறு ஐ.அன்வர்தீன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT