அண்ணாமலை: கோப்புப்படம் 
ஒரு நிமிட வாசிப்பு

புதிய ஐடி விதிகள் குறித்துதான் பேசினேன்: ஊடகங்கள் குறித்த பேச்சுக்கு அண்ணாமலை விளக்கம்

செய்திப்பிரிவு

ஊடகங்கள் குறித்த தன்னுடைய பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று (ஜூலை 15) திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்ட கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "இந்த ஊடகங்களை நீங்கள் மறந்துவிடுங்கள். நம்மைப் பற்றி பொய்யாகச் செய்தி போடுகிறார்கள். என்ன செய்யலாம் என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள். அடுத்த 6 மாதத்துக்குள் இந்த ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ஆகவே, தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. முன்னர் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகியுள்ளார். அனைத்து ஊடகங்களும் அவருக்குக் கீழ்தான் வரப்போகின்றன" என்று பேசினார்.

இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது. ஊடகங்களை மிரட்டும் வகையில் பேசுவதா? என பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை, இன்று (ஜூலை 16) கமலாலயத்தில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசினார். ஊடகம் குறித்த அவருடைய பேச்சுக்கு விளக்கமளித்த அண்ணாமலை, "நான் ஊடகம் குறித்துப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. நான் புதிய தொழில்நுட்ப விதிகள் குறித்துப் பேசினேன். இந்த விதிகள், சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு 'செக்'காக அமையும். பாரம்பரிய ஊடகங்கள் குறித்து நான் சொல்லவில்லை. தமிழக, இந்திய ஊடகங்கள் மீது மிகப்பெரிய மதிப்பை பாஜக வைத்திருக்கிறது. மோடி மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்" என்றார்.

SCROLL FOR NEXT