குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில், "குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி இன்று சந்தித்து முக்கிய விவாகரங்கள் குறித்து எடுத்துரைத்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வாரணாசி சென்ற பிரதமார் மோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவு, கோடௌலியாவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து, வாரணாசி காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.