ராகுல் காந்திக்கு 'ராணுவ ஃபோபியா' இருப்பதாக ஆந்திர பாஜக தலைவர் என்.வி.சுபாஷ் கிண்டல் செய்துள்ளார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படாததைத் தொடர்ந்து, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியானது.
இது குறித்து சுபாஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியதாவது: "காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திட்டமிட்டே நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.
அவர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மாண்பை அவமதித்துவிட்டார். இதன் மூலம் அவருக்கு ராணுவ ஃபோபியா (ராணுவ அச்சம்) இருக்குமோ என்று தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், "ராகுல் காந்தி ஏன் இதுபோல் நடந்து கொள்கிறார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் இதுபோன்ற கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்ட கருத்தைத் தாண்டியும் பேச நினைப்பது அதிகாரிகளை அவமதிக்கும் செயல்" என்று கூறினார்.