ஒரு நிமிட வாசிப்பு

மத்திய அரசின் மேலாதிக்கப் போக்குக்கு திமுக முடிவு கட்டும்: திருமாவளவன் கருத்து

ந.முருகவேல்

கொங்கு நாடு என்பது மக்களின் கோரிக்கை அல்ல. அது சங்பரிவார் அமைப்பின் கோரிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திட்டக்குடியில் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு இன்று வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திட்டக்குடி பழைய பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் மனு அளித்தவர்களில் 85 சதவீதம் பேர் நீட் தேர்வு வேண்டாம் என எழுதிக் கொடுத்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என சட்டம் இயற்றிய திமுக அரசு, மருத்துவக் கனவுகளைச் சுமந்திருக்கும் மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்யும் என்ற நம்பிக்கை அனைவரிடம் இருக்கிறது. காவிரி நதிநீர்ப் பிரச்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சியினருடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளோம். மத்திய அரசின் மேலாதிக்கப் போக்குக்கு திமுக ஒரு முடிவு கட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கொங்கு நாடு என்ற கோரிக்கை மக்களின் கோரிக்கை அல்ல. அது சங்பரிவார் அமைப்பின் கோரிக்கை. பிராந்திய உணர்வைத் தூண்டிவிட்டு தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி. மோடி அரசு செய்கின்ற சித்து வேலை. அதற்குச் சில ஏடுகள் துணை போகின்றன அவர்கள் தமிழர் விரோதிகள் என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வட இந்தியர்களை குடியமர்த்துவதன் மூலம் அவர்களை வாக்காளராக்கி தமிழர்களை வீழ்த்துவதற்கான முயற்சி. அதைத் தமிழகத்தைச் சேர்ந்த கொங்கு நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். தக்க சமயத்தில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள்'' என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT