குன்னூர் அருகே சுருக்கில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு. 
ஒரு நிமிட வாசிப்பு

குன்னூர் அருகே சுருக்கில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு: பல மணி நேரப் போராட்டம் வீண்

ஆர்.டி.சிவசங்கர்

குன்னூர் அருகே பன்றிக்கு வைத்த சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை, 4 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. வளர்ப்பு நாய் மற்றும் கால்நடைகளைச் சிறுத்தைகள் கடித்து இழுத்துச் செல்வது தொடர்கிறது.

இந்நிலையில், கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட எல்லநள்ளி அருகேயுள்ள ஜோதி நகர் கிராமத்தில், ஒரு தடுப்பு வேலியில் சுமார் 2 வயது ஆண் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருக்குப் போராடி வருவதாக வனத்துறையினருக்கு இன்று (ஜூலை 15) தகவல் கிடைத்தது. சரகர் சசிக்குமார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக் குழுவினர்கள் பாதுகாப்பு உடை அணிந்து அங்கு வந்தனர்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். யாரோ சிலர் காட்டுப் பன்றியைப் பிடிக்க வேலியில் சுருக்குக் கம்பி வைத்திருந்தனர். அதில் சிக்கியிருந்த சிறுத்தையை வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி விடுவித்தனர். ஆனால், சுருக்குக் கம்பியில் நீண்டநேரமாக சிறுத்தை போராடியதில், பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினர் உயிரிழந்த சிறுத்தையைப் பிரேதப் பரிசோதனைக்காக உதகை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

சுருக்கு வைத்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். உயிரோடு இருந்த சிறுத்தை 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், துரதிருஷ்டவசமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் கே.சரவணன் கூறும்போது, "வேலியில் இருந்த சுருக்கில் மாட்டிக்கொண்ட சிறுத்தை வெகுநேரமாகப் போராடியதால், அதன் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, பின்னங்கால்கள் செயலிழந்தன. சிறுத்தையை உடனடியாக சிகிச்சைக்குக் கொண்டுசெல்ல முற்பட்ட நிலையில், சிறுத்தை உயிரிழந்தது" என்றார்.

SCROLL FOR NEXT