ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி. 
ஒரு நிமிட வாசிப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக சிறந்த உட்கட்டமைப்பு நிறைந்ததாக திருச்சி மாநகரை மாற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ஜெ.ஞானசேகர்

சென்னைக்கு அடுத்தபடியாக சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாக, திருச்சி மாநகரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் வழங்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான குடல் உள்நோக்குக் கருவிகள், மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி நிதி ரூ.53 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் அரசு மருத்துவமனைக்கு ரூ.18.75 லட்சம் மதிப்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிப்காட் சார்பில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியன வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 14) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மருத்துவக் கருவிகள் பயன்பாட்டைத் தொடங்கிவைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

"கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்கள் பல்வேறு வசதிகள் கொண்டவையாக உள்ளன. ஆனால், திருச்சியில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை. எனவே, திருச்சியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டித் தருவது, தெருவிளக்கு வசதி, சாலைகளை மேம்படுத்துவது, அனைத்து வார்டுகளுக்கும் குடிநீரைச் சீராக விநியோகிப்பது உட்பட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளன.

சாலையோரவாசிகள் இரவு நேரங்களில் தங்கிக்கொள்ள அனைத்து வசதிகளும் கொண்ட தங்குமிடம் கட்டப்படவுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் முதல்வரின் அனுமதியைப் பெற்று செயல்படுத்தப்படும். தென்னூர் அண்ணா சாலை முதல் நீதிமன்ற வளாகம் வரை பறக்கும் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

ரயில்வே அனுமதியைப் பெற்று கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி என்ற வரிசையை, சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகரைச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT