நர்மதா, ஜீவிதா, ஜோதிலட்சுமி, அஸ்விதா, சுமதி 
ஒரு நிமிட வாசிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் பலி

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி, கரும்புகுப்பம் பகுதியில், குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவிகள், 2 பெண்கள் என, 5 பேர் உயிரிழந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் சீதாம்பாள் தெருவைச் சேர்ந்த சிலர், அங்குள்ள அங்காளம்மன் கோயில் குளத்தில் இன்று (ஜூலை 14) துணி துவைக்கச் சென்றனர்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகள் நர்மதா (12), குளத்தில் ஆழத்தில் சிக்கிய நிலையில், அவரைக் காப்பாற்ற ஒருவர்பின் ஒருவராகச் சென்ற ராஜ் மனைவி சுமதி (35), அவரது மகள் அஸ்விதா (14), முனுசாமி மனைவி ஜோதி (38), தேவேந்திரன் மகள் ஜீவிதா (14) ஆகியோர் ஒருவர்பின் ஒருவராகக் குளத்தின் உள்ளே மூழ்கி ஆழத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் அங்கு இல்லாத நிலையில், குளக்கரையில் துணிகள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்து குளத்தில் தேடியபோது 5 பேரின் உடல்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

இதுகுறித்து, சிப்காட் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து இறந்த 5 பேரின் உடல்களை பொன்னேரி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.

தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரித்து, வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சித் தலைவர் அஸ்வினி சுகுமாறன், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

ஒரே பகுதியில் ஒரே தெருவைச் சேர்ந்த 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT