தஞ்சாவூர் ரயிலடியில் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து முழக்கங்கள் எழுப்பிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர். 
ஒரு நிமிட வாசிப்பு

மேகதாது அணை விவகாரம்: தஞ்சையில் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்துப் போராட்டம்

வி.சுந்தர்ராஜ்

மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணையைக் கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூரில் எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து இன்று போராட்டம் நடைபெற்றது.

அப்போது, ''காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையைக் கர்நாடக அரசு கட்டுகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது. எனவே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தொடக்கநிலைப் பணிகள் நடைபெறுகிறதா என்பதை அறிய உண்மை அறியும் குழுவைத் தமிழக அரசு அனுப்ப வேண்டும்.

தொடக்க நிலைப் பணிகள் நடைபெற்றால், அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்து தடையாணை கேட்க வேண்டும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இறுதித் தீர்ப்பு வரும் வரை கர்நாடக அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இப்பணியைத் தொடங்கக் கூடாது எனக் கர்நாடக முதல்வருக்கு மத்திய நீர்வளத் துறை கடிதம் அனுப்பி, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழக அரசு நடத்த வேண்டும். கர்நாடகத்துக்கு எதிரான பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்'' என்று முழக்கங்கள் எழுப்பினர்.

இவற்றை வலியுறுத்தியும், தமிழர்களுக்கு எதிரான இன விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் கர்நாடக அரசைக் கண்டிக்கும் வகையிலும் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தஞ்சாவூர் ரயிலடியில் இன்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோலக் கும்பகோணம், சோழபுரம், செங்கிப்பட்டி, பூதலூர், அல்லூர், வெள்ளாம்பெரம்பூர், நடுக்காவேரி என பல்வேறு இடங்களில் எடியூரப்பா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT