தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அடுத்த பில்பருத்தி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (66). இவர் மனைவி சுலோச்சனா (61), அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு மணமாகி வெளியூர்களில் அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கிருஷ்ணன்- சுலோச்சனா தம்பதியர் பில்பருத்தியில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணன், சுலோச்சனா இருவரும் அவர்களது வீட்டுக்கு அருகே வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து பொம்மிடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சொத்து விவகாரத்தில் கொலை நடந்ததா அல்லது திருட்டு கும்பல் கொலை செய்தனரா அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் மூலம் அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.