தமிழகத்தில் மாநிலச் சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக (கொங்கு நாடு) உருவாக்க வேண்டும் என பாஜக கோவை வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாஜக கோவை வடக்கு மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் அன்னூரில் நேற்று (ஜூலை 11) செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், ''மத்திய அரசு இலவசமாக வழங்கும் கரோனா தடுப்பூசியை, தமிழக அரசு சென்னை மண்டலத்துக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்தும், கோவை மாவட்டத்துக்குப் பாகுபாட்டுடன் குறைவாக ஒதுக்கியதற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கவுரவத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநிச் சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக (கொங்கு நாடு) உருவாக்க வேண்டும் என இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
அதேபோல தேசிய பக்திமிக்க உணர்ச்சி முழக்கமான, ஜெய்ஹிந்த்தை திமுக திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அவமதித்ததற்கும், அதற்கு உடந்தையாக இருந்த தமிழக அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.