ஒரு நிமிட வாசிப்பு

மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகள் வசம் பயன்படுத்தாமல் 1.54 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் பயன்படுத்தப்படாமல் 1.54 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் கூறும்போது, ''இன்று (ஜூலை 12) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 38.86 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 63,84,230 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.

இதில் வீணான தடுப்பூசிகள் உட்பட மொத்தம் 37,31,88,834 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மீதம் சுமார் 1.54 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் பயன்படுத்தப்படாமல் உள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசே இலவசமாக மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கும் திட்டத்தை ஜூன் 21-ம் தேதி தொடங்கியது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT