திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனி பகவான் சன்னதியில் வழிபாடு செய்த பக்தர்கள் | படம்: வீ.தமிழன்பன். 
ஒரு நிமிட வாசிப்பு

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

திருநள்ளாற்றில் உள்ள சனி பகவானுக்குத் தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சனிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். கரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், தமிழகப் பகுதிகளில் கரோனா பரவல் குறையாமல் இருந்தது. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், திருநள்ளாற்றுக்கு பக்தர்களின் வருகை மிகக் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் கடந்த 5-ம் தேதி முதல் பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த சனிக்கிழமையான இன்று (ஜூலை 10) திருநள்ளாற்றில் பக்தர்களின் வருகை சற்று அதிகரித்துக் காணப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் திரளானோர் தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாள், சனி பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபாடு செய்தனர். கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி கைகளைச் சுத்தம் செய்து, முகக்கவசம் அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நளன் குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

SCROLL FOR NEXT