தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாலுதீன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011-க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இஸ்லாமியர்கள் மக்கள் தொகை 50 சதவீதம் உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த சூழலில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
பக்கத்த மாநிலமான கேரளாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு 12 சதவீதம், ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமீபத்தில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில்
இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.